இந்தியா வெள்ளையனுக்கு பிறந்த பிள்ளை’ என்ற கவிதையை தாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் விளக்கம் அளித்துள்ளார். சீமான் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த மாதம் ஒரு கவிதையை வெளியிட்டிருந்தார். அந்த கவிதை கவிக்கோ அப்துல்ரகுமான் எழுதியது.

சீமான் பதிவிட்ட அப்துல் ரகுமானின் கவிதை:

வெள்ளையனுக்குக் குளிர் அடித்தது துண்டுதுண்டாய்க் கிடந்த துணிகளை எடுத்து ஒட்டுபோட்டுச் சட்டை தைத்து அணிந்து கொண்டான் –

அதை இந்தியா என்றார்கள்!

கோடை வந்தது புழுக்கம் தாளாமல் அவன் சட்டையைக் கழற்றி எறிந்தான் –

அதை சுதந்திரம் என்றார்கள்.

சுதந்திரம் வாங்க தெரிந்தது வைக்கத் தெரிந்ததா?

ஆங்கிலேயன் கொடுத்தது சுதந்திரம் மட்டுமல்ல

இந்தியாவும்தான்.

இந்த எல்லைகளோடு இந்தியா என்றொரு நாடு எப்போதும் இருந்ததில்லை

ஆம்

இந்த இந்தியா வெள்ளையனுக்குப் பிறந்த பிள்ளை –

ஆனால் நாம் தந்தை உரிமை கொண்டாடினோம்.

ஆங்கிலேயனின் சிலுவைக்குறி நம்மைக் கூட்டும் குறியாக இருந்தது –

ஆனால் நாம் வாங்கிய சுதந்திரமோ நம்மைச் சிலுவையில் அறைந்தது அவன் கூட்டினான் நாம் கழித்தோம் அவன் தொகுத்தான் நாம் வகுத்தோம் சாதி என்றும் சமயம் என்றும் விதவிதமான வகுத்தல் இடையிலோர் ஈவும் இல்லை இரக்கமும் இல்லை –

கவிக்கோ அப்துல் ரகுமான்

இக் கவிதையை பதிவு செய்தது குறித்து இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்:
எப்படிங்க பாசம் வரும்? அப்துல் ரகுமானின் இந்த கவிதை, வாங்கிய சுதந்திரத்தை என்ன செய்தோம் என்பதாக கேள்வி எழுப்புகிறது. குடிக்க நீரைத் தராத குடியரசு மீது, தாகத்துக்கு தண்ணீர்தராத தேசம் மீது எப்படி எங்களுக்கு பாசம் வரும்?

13 கோடி தமிழர் இந்த நிலத்தில் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் வாழுகிறோம். கர்நாடகாவில் மட்டும் ஒன்றரை கோடி தமிழர் வாழ்கின்றன. இந்த மண்ணில் 13 கோடி தமிழர் வாழ்கிறோம்.

சிங்களவன் நண்பனா? ஆனால் தமிழர் பகைவர்… எங்கோ இருக்கும் சிங்களவன் இந்திய அரசுக்கு நண்பனா? சிறுவாணியின் குறுக்கே அணை கட்டினால் 3 மாவட்டம் பாலைவனமாகிவிடும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா? தமிழன் எப்படியோ நாசமாகப் போகட்டும் என்றுதானே நினைக்கிறார்கள்…

குடும்ப கோபம் ஒரு தந்தை மகனை சரியாக கவனிக்கவில்லை எனில் கோபம் வராதா? ஒரு தாய், மகனை நலம் விசாரிக்காவிட்டால் கோபம் வராதா? அதுபோல்தான் இந்த கவிதையும்…. நாங்கள் மாநிலங்கள் இணைந்த ஒரு கூட்டாட்சியாக இருக்கவே விரும்புகிறோம். இவ்வாறு சீமான் விளக்கம் அளித்தார்.

Comments

comments, Login your facebook to comment