01-1430463763-safety-pinகுழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய ‘சேப்டி பின்னை’ கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது ஒன்றரை வயது குழந்தை சேதுமதி கடந்த 23ஆம் திகதி திடீரென மூச்சுவிட சிரமப்பட்டது.

இதனையடுத்து அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை பெற்றோர் துாக்கிச் சென்றனர்.

குழந்தையின் தொண்டைப்பகுதியில் பொருள் ஒன்று சிக்கியிருப்பதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். காது, மூக்கு, தொண்டை பிரிவு துறைத் தலைவர் அலி சுல்தான் தலைமையிலான டாக்டர்கள் பரிசோதித்தனர்.

அப்போது மூச்சுக்குழாயில் ‘சேப்டி பின்’ சிக்கியிருப்பதை கண்டறிந்து அவர்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து பேசிய மருத்துவர் அலி சுல்தான்,

சி.டி., ஸ்கேன் பரிசோதனையில் குழந்தையின் இடது கிளை மூச்சுக்குழாயில் சேப்டி பின் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேல்நோக்கி விரிந்த நிலையில் இருந்ததால் அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. உடனடியாக அகற்றவில்லை எனில் குழந்தை உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.

சிகிச்சைக்குப் பின் சில மணி நேரம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மாலையே குழந்தையின் உடல் நலம் சீரடைந்தது.

நவீன கருவிகள் வாயிலாக இந்த சிகிச்சை சாத்தியமாயிற்று. சிறு குழந்தைகளுக்கு எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டால் பெற்றோர் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது என்றார்.

Comments

comments, Login your facebook to comment