Vadiveluசென்னை ரயில் நிலையத்தில் தனது தோழிகளுடன் சேர்ந்து வடிவேலு கொமடியை பார்த்து சிரித்துக்கொண்டிருந்த பெண்ணை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கியதில் அவரது வலது காது கேட்கும் திறனை இழந்துள்ளது.

வில்லிவாக்கதை சேர்ந்த ரக்ஷனா என்ற பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, ரூபாய் நோட்டு பிரச்சனை குறித்து மீம்ஸாக உலா வந்துகொண்டிருக்கும் வடிவேலு கொமடியை தனது கைப்பேசியில் பார்த்து சிரித்துக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது, இவரை கடந்து சென்ற டிக்கெட் பரிசோதகர் வசந்தா(40) என்பவர், ரக்ஷ்னாவும், அவரது தோழிகளும் தன்னைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து அவர்களிடம் சென்று வாக்குவாதம் செய்துள்ளார்.

நாங்கள், உங்களை பார்த்து சிரிக்கவில்லை, வடிவேலு கொமடியை பார்த்துதான் சிரித்துக்கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த வசந்தா…ஏண்டி என்னை பார்த்தா கிண்டல் செய்கிறாய் எனக்கூறி, ரக்ஷனாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு, பரிசோதக அறைக்குள் சென்றுள்ளார்.

அங்கு, ஏனைய பரிசோதகர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து, ரக்ஷனாவின் தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார். மேலும் ரக்ஷனாவின் கழுத்தை பிடித்து இழுத்து சென்று தலையை சுவரில் வேகமாக மோதியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் ரக்ஷனா அலறி துடித்துள்ளார்.

சத்தம் கேட்ட ஓய்வுபெற்ற எஸ்ஐ ராமலிங்கம் என்பவர், அறையின் கதவை தட்டி திறந்துபார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். எதற்காக ஒரு மாணவியை போட்டு இப்படி அடிக்கிறீர்கள்? இதற்கு உங்களுக்கு அனுமதி உண்டா? என்று கேட்டுள்ளார்.

இந்த விடயம் உங்களுக்கு தேவையில்லாத ஒன்று, இதில் நீங்கள் தலையிட வேண்டி அவசியம் இல்லை என்று கூறி அவரை வெளியே அனுப்பியுள்ளனர்.

பின்னர், ரக்ஷனாவிடம் இதனை வெளியில் சொன்னால், நுங்கம்பாக்கம் சுவாதிக்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என கூறி மிரட்டி வெளியே தள்ளியுள்ளனர். வலி தாங்கமுடியாமல் அழுதுகொண்டிருந்த ரக்ஷனாவின் நிலமையை பார்த்து அவரது தோழிகள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த ரக்ஷனாவின் தாய் தனது மகளின் நிலமையை பார்த்து ரயில் நிலையத்தில் கதறி அழுதுள்ளார்.

அதன்பின்னர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்ததில், ரக்ஷனாவின் வலது காது கேட்கும் திறனை இழந்துள்ளது.

புகாரின்பேரில் பெரம்பூர் ரயில்வே பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொமடியை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கியதில் அவர் காது கேட்கும் திறனை இழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments

comments, Login your facebook to comment