1461911869-6785கொழும்பில் இருந்து சென்னைக்கு ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை நூதன முறையில் கடத்தி வந்த இலங்கை பெண்ணை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்னை வந்து செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த சந்திரிகா ரூக்லாந்தி (வயது 28) என்ற பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவரது உடமைகளில் ஏதும் கிடைக்காத நிலையில், அவர் போதை மருந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது வயிற்றில் போதைமருந்து மாத்திரைகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது போதைப்பொருளை மாத்திரை வடிவில் விழுங்கி கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து மருத்துவர்கள் உதவியுடன் வயிற்றில் உள்ள மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அந்த பெண்ணின் வயிற்றில் ரூ.2½ கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment