மாராவில குறூஸ்பள்ளிக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்த தந்தையும் சிறுவனும் அரலி விதையினை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் மூன்றரை வயதுடைய அசேன் கவிந்து எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளவனாவான். 

உயிரிழந்த சிறுவனின் தந்தையான சஜித நிசாந்த என்பவர் ஆபத்தான நிலையில் மாராவில வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கூலி வேலை செய்து வந்த இவரே உயிரிழந்த சிறுவனைப் பராமரித்து வந்துள்ளதாகவும்,  உயிரிழந்த சிறுவனுக்குப் புறம்பான இவரது  இன்னும் இரண்டு பிள்ளைகள்  சிறுவர் இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழந்தைகளின் தாய் தந்தையுடன் பிரச்சினை பட்டுக் கொண்டு சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதோடு இவ்வாறு  தன்னையும், தனது பிள்ளைகளையும் தனியாக விட்டுவிட்டு மனைவி வெளிநாடு சென்றதால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்த இத்தந்தை நேற்று முன்தினம் இரவு அரலி விதைகளை வேறு உணவுடன் கலந்து தனது பிள்ளைக்கும் ஊட்டிவிட்டு பின்னர் தானும் உட்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு அரவி விதைகளை உட்கொண்டு தந்தையும் மகனும் ஆபத்தான நிலையில் இருந்ததை அவதானித்த அயலவர்கள் உடனடியாக  அவ்விருவரையும் மாராவில வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதிலும் சிறுவன் அங்கு உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment