625.500.560.350.160.300.053.800.900.160.90யுத்தத்திற்கு பின்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கான எந்த உதவிகளையும் செய்யவில்லை. மாறாக இங்கு மேற்கொள்ளப்பட்ட சில அபிவிருத்திகளை கூட எம்மோடு கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகவும் மத்தியில் உள்ளவர்களை கொண்டு வடக்கை சேர்ந்தவர்களை புறக்கணித்து மேற்கொண்டு வந்துள்ளது. என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண நிர்மாண நிர்மாணிகள் சங்கத்தின் கூட்டம் நேற்று யாழ்.பொது நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

போருக்குப் பின்னரான வடக்கு மாகாணம் பல்வேறு துறைகளிலும் பின் தங்கிய நிலையில் உள்ளது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு உதவித்திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்கள் எமக்கு தேவையாகவுள்ளன. எனினும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தியை தெற்கில் உள்ளவர்கள் மேற்கொள்ள முடியாது.

அதற்கான அனுமதியை வடக்கில் உள்ளவர்கள் வழங்கவும் முடியாது. இந்த காரணத்தினால் இங்குள்ள தொழிலாளர்கள் முதற் கொண்டு நிர்மாணிகள் வரை வெகுவாக பாதிப்பை எதிர்நோக்கியே வந்திருந்தனர்.

இந்த தவறை தற்போதும் நாம் விட முடியாது. தமிழ் மக்களின் துணையுடன் ஆட்சிக்கு வந்துள்ள நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு உதவி செய்ய முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை தெற்கில் உள்ள இனவாதிகள் தடுத்து வருகின்றனர்.

இதனால் நல்லாட்சியின் உதவிகள் அபிவிருத்தி திட்டங்கள் வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றன.

தெற்கில் உள்ள இனவாதிகள் வடக்கு மக்களுக்கு நல்லாட்சி அரசு உதவி செய்வதனை தடுப்பதற்கான ஒரே காரணம் இனவாதமே. வடக்கில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு அவர்களுடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டால், அவர்களுடைய அரசியலை நடத்த முடியாது என்பதும் ஒரு காரணமாகவும் உள்ளது.

எனவே எமக்கான உதவிகளை நாம் பெறுவதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. எமது அபிவிருத்திகளை தெற்கில் உள்ளவர்கள் செய்து அவர்களே இலாபமடைகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

எமக்கான அபிவிருத்திகள் எம்மிடம் கலந்தாலோசிக்கப்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே எம்முடைய கோரிக்கை மற்றும் இங்குள்ள அபிவிருத்தி பணிகள் எம்முடைய நிர்மாணிகளால் மேற்கொள்ளப்பட்டு அதில் எம்முடைய தொழிலாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக கலந்துகொண்டிருந்த வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

Comments

comments, Login your facebook to comment