downloadமட்டக்களப்பு – மகிழூர் கண்ணகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் மீது, இரகசியப் விசாரணைப் பிரிவினர் எனத் தெரிவித்து இனந்தெரியாத நபர்கள் இருவர் கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த கத்திக்குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த பொன்னம்பலம் யசோதரன் என்ற இளைஞன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யசோதரனை இனந்தெரியாத நபர்கள் தாக்கிய வேளை, அவரைத் தடுக்கச் சென்ற அவரது சகோதரனான உதயசங்கரும் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – மகிழூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் யசோதரன் நேற்றிரவு 7.00 மணியளவில் தனது வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது, வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், தாங்கள் இரகசிய விசாரணைப் பிரிவில் இருந்து வந்திருப்பதாகவும் யசோதரனை வெளியில் வருமாறு அழைத்தனர்.

வெளியில் செல்ல யசோதரன் மறுத்த போதிலும், வீட்டினுள் நுழைந்த இனந்தெரியாத இருவரும் யசோதரனை சரமாரியாக கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

இதனைத் தடுக்கச்சென்ற அவருடைய அண்ணனான உதயசங்கரும் ஆயுதங்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சகோதரர்கள் இருவரும் தற்பொழுது களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிட்டதை தொடர்ந்து, தப்பியோடிய இனந்தெரியாத நபர்களை கிராமத்து இளைஞர்கள் சிலர் பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர்கள் இருவரும் ஓந்தாச்சிமடம் என்ற இடத்தில் விபத்துக்குள்ளான நிலையில், கிராமத்து இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்டது.

இதன்போது வீதிப் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யசோதரன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்காக சென்று விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்த நிலையில் விடுமுறை நிறைவுற்று இன்று 20 ஆம் திகதி மீண்டும் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இவ்வாறான தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். download (1) download

Comments

comments, Login your facebook to comment