2013-03-07-Untitled3இலங்கையில் ஆண்களை விட பெண்களின் சராசரி ஆயுட்காலம், 6.6 ஆண்டுகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே சனத்தொகை மற்றும் புள்ளி விபரத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் இந்து பண்டார கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுள்காலம் 78.6 ஆண்டுகளாக இருக்கும் அதேவேளை, ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 72 ஆண்டுகளாகவே இருப்பது அண்மைய மேற்கொண்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

1962 – 1964 காலப்பகுதி வரையில் இலங்கையில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களை விட குறைவாகவே இருந்தது.

1920 – 1922 ஆண்டு காலப்பகுதியில், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 32.7 ஆண்டுகளாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 30.7 ஆண்டுகளாகவுமே இருந்தது. கடந்த ஒன்பது பத்தாண்டுகளில் இந்த நிலை பெரிதும் மாறியிருக்கிறது.

அம்பாறை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பெண்களின் சராசரி ஆயுட்காலம் 81.1 ஆண்டுகளாக உள்ளது. அதையடுத்து மாத்தறையில் 80.2 ஆண்டுகளாகவும், காலி மற்றும் கம்பஹாவில் 79.9 ஆண்டுகளாகவும் பெண்களின் சராசரி ஆயுட்காலம் உள்ளது.

அதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே அதிக பட்சமாக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 74.2 ஆண்டுகளாக உள்ளது. அதையடுத்து, மாத்தறையில் 73.9 ஆண்டுகள், இரத்தினபுரி மற்றும் மொனராகலையில் 73.7 ஆண்டுகளாக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் உள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்களின் ஆகக்குறைந்த ஆயுட்காலம் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இங்கு ஆண்களின் ஆயுட்காலம் 60.9 ஆண்டுகளாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 72.9 ஆண்டுகளாகவும் உள்ளன.

ஆண்களின் இரண்டாவது குறைவான சராசரி ஆயுட்காலம், கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 64.5 ஆண்டுகளாகும்.

அதையடுத்து, மட்டக்களப்பில் 66.8 ஆண்டுகளும், வவுனியாவில் 67.8 ஆண்டுகளும், ஆண்களின் சராசரி ஆயுட்காலமாக உள்ளது.

இலங்கையில் ஆண்களை விடவும் பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்கின்றனர். இதற்கு சில உயிரியல் மற்றும் புவியியல் காரணிகளும் காரணமாக உள்ளன.

எனினும், ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சராசரி ஆயுட்காலம் திருப்திகரமானதாகவே உள்ளது.

ஜப்பானியர்கள் சராசரியாக 84.8 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றனர்.

அதையடுத்து, சிங்கப்பூரில் 84.7 ஆண்டுகளும்,

சுவிட்ஸர்லாந்தில் 82.5 ஆண்டுகளும்,

அமெரிக்காவில் 79.7 ஆண்டுகளும்,

டென்மார்க்கில் 79.2 ஆண்டுகளும்,

இலங்கையில் 76.5 ஆண்டுகளும்,

மாலைதீவில் 75.3 ஆண்டுகளும்,

இந்தியாவில் 68.1 ஆண்டுகளும்,

கென்யாவில் 63.7 ஆண்டுகளும்,

சூடானில் 63.7 ஆண்டுகளும்,

உகண்டாவில் 54.9 ஆண்டுகளும்,

ஆப்கானிஸ்தானில் 50.8 ஆண்டுகளும் சராசரி ஆயுட்காலம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

comments, Login your facebook to comment