interview-news-reporterமட்டக்களப்பில் அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளராக பணியாற்ற அமைச்சின் செயலாளர்களிடம் அனுமதி பெறவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது

மட்டக்களப்பில் கடந்த பல வருடங்களாக ஊடகவியலாளராக செயற்பட்டுவரும் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக பிரதேச செயலாளர் ஒருவரினால் கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

அதில் தாபன விதிக்கோவையின் 47 ஆவது அத்தியாயத்தின் 8ம் இலக்கத்தின் 6வது பந்தியின் பிரகாரம் அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் ஊடகவியலாளராக பணியாற்ற வேண்டுமாக இருந்தால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெறவேண்டும்.

எனவே தாங்கள் ஊடகவியலாளராக கடமையாற்றுவதற்கு செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளரின் குறித்த கடிதமானது அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பில் இதுவரை காலத்திற்கும் விடுக்கப்படாத அறிவுறுத்தலை அரச நிர்வாகம் விடுத்துள்ளமையானது,

மாவட்டத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் பொறுந்தும் என்பதுடன் இது மிகவும் பாரதுரமான ஊடக அடக்குமுறை என ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்மைகளை வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான மறைமுகமான பழிவாங்கல்கள் நடைபெற்று வந்த நிலையில், அது தற்போது விஸ்வரூபமெடுத்துள்ளதாக ஊடக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment