கொழும்பில் இருந்து வருகைத்தந்த பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸார் யாழில் நடத்திய அதிரடி தேடுதல் நடவடிக்கையில் ஆவா குழுவினை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் படைத்தரப்பிணையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது. இவ் அதிரடிக் கைதுகள் தொடர்பாக மேலும் தெரியவருவது,

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள், கோஸ்டி மோதல் மற்றும் சமூக விரோத குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக அண்மையில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டதுடன், குடும்பஸ்தர் ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் அட்டகாசம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த வாள்வெட்டுக் குழுவினை கைது செய்வதற்காக கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட விசேட பொலிஸ் குழு ஒன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன்படி யாழ்ப்பாணத்திற்கு வந்த குறித்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் குழு வாள்வெட்டுக் கும்பல் தொடர்பான தீவிர விசாரணைகளை நடத்தியதில், அக் குழு தொடர்பான

கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் அதிரடியாக கைது நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்படி நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான கோட்டல் ஒன்றில் பணிபுரிந்துவந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கொக்குவில், திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது

செய்யப்பட்டவர்களின் ஒருவர் யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தமிழ் மக்கள் பேரவையினால் நடாத்தப்பட்ட எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி சார்பாக சில பணிகளை முன்னெடுத்தவர் என்று தெரிய வந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத குற்றத் தடுப்பு பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2 பேரை கைது செய்யும் போது பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், அவரை கைது செய்தமைக்கான சான்றுப் பத்திரத்தினையும்

குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளனர். இருப்பினும் ஒருவரை கைது செய்யும் போது கைது செய்தமைக்கான சான்றுப் பத்திரம் வழங்கப்படவில்லை.

இதனால் குறித்த நபரின் குடும்பத்தினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் கவனத்திற்கு இவ்விடயத்தினை கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆராய்வுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட வேளை தாங்கள் 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு உறுதி செய்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு நேற்றுக் காலையும் தேடுதல் நடத்திய பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிகமாக 3 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இருவரை உடுவில் பகுதியில் வைத்து பயங்காவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை, வீட்டில் இருந்தவர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கூக்குரலும் எழுப்பியுள்ளனர்.

இருந்த போதும், தங்களை குடும்பத்தினருக்கு அடையாளப்படுத்திக் கொண்ட பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார், இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ஹயஸ் வாகத்தினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இருவரையும் கைது செய்து கொண்டு சென்ற வேளை மருதநார் மடப்பகுதியில் வைத்து அவர்ளுடைய சகோதரன் வாகனத்தினை மறித்து பங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவ அடத்திற்கு சுன்னாகம் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர். அங்கு வந்த விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர், சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மீது பொலிஸாரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் இராணுவ படைப்பிரிவினைச் சேர்ந்தவர் ஆவார் என்றும். அவர் சிவில் உடையில் ஆயுதத்துடன் நடமாடித் திரிந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Comments

comments, Login your facebook to comment