யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி பகுதியில் இரு தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 14 இராணுவத்தினருக்கும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

மட்டுவில் வடக்கை சேர்ந்த செல்வரத்தினம் ஜெயசீலன், நாகமணி சௌந்தரராஜன் ஆகிய இளைஞர்கள் இருவர் கடந்த 1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி மயிலங்காட்டு பகுதிக்கு உறவினருடைய திருமணத்துக்காக சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் சிறுப்பிட்டி, புத்தூர் வாதரவத்தையில் அமைந்திருந்த இராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் அச்சுவேலி பொலிஸாரால் 1998 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த இராணுவ முகாமில் கடமையாற்றிய 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் 16 இராணுவத்தினரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 18 வருடங்களின் பின்னர் சட்டமா அதிபரினால் இவ்விடயம் தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு மேற்குறித்த இரு இளைஞர்களையும் கொலை செய்ததன் அடிப்படையில் குறித்த 16 இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கை தொடர்ந்து நடத்துமாறு யாழ்.நீதவான் நீதிமன்றுக்கும் அச்சுவேலிப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் குறித்த 16 இராணுவ வீரர்களுக்கும் யாழ் நீதவான் நீதிமன்றால் அழைப்பு கட்டளை அனுப்பப்பட்டது.

அதன்படி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது தளபதி வீரசிங்க உட்பட சுமன்குமார, பிரேமதிலக, ஜெனக,சுனில், சமரசிங்க, பிரேமஜெயந்த, சுதக், பெரேரா, கேரத், சந்தரே, ஜெயக் கொடி, ரத்நாயக்க, ஜெகத் ஆகிய 14 இராணுவத்தினர் ஆஜராகியிருந்தனர்.

மேலும் பீரிஸ் மற்றும் நிமால் எனும் 2 இராணுவத்தினர் கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்துள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Comments

comments, Login your facebook to comment