வவுனியா குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கலாசார மண்டபம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கையளிக்கப்பட்டும், இதுவரை திருத்தப்படாத நிலையில் சமூக சீரழிவுக்கு வழிவகுப்பதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா அரசாங்க அதிபரிடம் கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி இராணுவத்தினரால் குறித்த கலாசார மண்டபம் கையளிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது மாலை நேரங்களில் இளைஞர்கள் கூடும் இடமாக இக்கட்டிடம் மாறியுள்ளது. 

இளைஞர்கள் ஒன்றுகூடி, மாலை நேரங்களில் மது அருந்தி வருவதாகவும் இதனால் கலாசார சீரழிவு ஏற்படுவதனால் உடனடியாக அக்கட்டிடத்தை திருத்தி உரிய பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா குகனேஸ்வரனின் நிதியொதுக்கீட்டில் கடந்த 1998 ஆம் ஆண்டளவில் அமைக்கப்பட்ட இந்தக் கலாசார மண்டபம் அமைக்கப்பட்டு, திறப்புவிழாவினை காண்பதற்கு முன்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.

சுமார் 18 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த கலாசார மண்டபம், யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் பூர்த்தியாகிய நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி வவுனியா அரசாங்க அதிபரிடம் இராணுவத்தினர் கையளித்தனர். குறித்த மண்டபத்தை வவுனியா பிரதேச செயலகத்திடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கலைஞர்களுக்கு குறைந்த வாடகையில் விட்டு கலை வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

எனினும் சுமார் 2 மாதங்களுக்கு மேலாகியும் குறித்த கட்டிடம் எந்தவிதமான திருத்த வேலைகளும் செய்யப்படாமலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாமலும் காணப்படுவதனால் மாலை வேளைகளில் இளைஞர்கள் கூடும் இடமாக இக்கட்டிடம் மாறியுள்ளது. இதேவேளை, இளைஞர்கள் மது அருந்தும் பகுதியாகவும் மாறியுள்ளதனால் இதுதொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, குறித்த கட்டிடத்தினை கலாசார பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Comments

comments, Login your facebook to comment