wigneswaran2_1654671gவட மாகாணத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் நிலைகொண்டிருக்கும் நிலையில், ஆவா குழு என்ற பெயரில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆயுதக் குழுவொன்று எவ்வாறு சுதந்திரமாக செயற்பட முடியும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இந்த ஆவா குழுவை ஸ்ரீலங்கா இராணுவமே உருவாக்கி இயக்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த ஆவா குழு தொடர்பிலும் அதன் பின்னணி தொடர்பிலும் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி தென்பகுதி அரசியல் களத்திலும் அண்மைக்காலமாக பெரிதாகப் பேசப்பட்டுவரும் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழு தொடர்பில் ஊடகங்களுக்கு அளித்த செவ்வியிலேயே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார்.

ஆவாக்குழு சம்பந்தமாக எல்லோருமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். யார் இந்த ஆவா குழு என்பது பற்றி ஒருவருக்கும் சரியாகத் தெரியவில்லை. இராணுவத்தினர் தான் முதலில் ஆவாக்குழு பற்றி குறிப்பிட்டிருந்தார்கள்.

இப்பொழுது கூறுகின்றார்கள் அதனைத் தொடக்கியதும் இராணுவம், அதனை முன்னெடுத்து செல்வதும் இராணுவம் என்ற கருத்துக்கள் வெளியாகியுள்ளன. இவை சம்பந்தமாக எந்தவிதமான கருத்துக்களையும் முடிவாக என்னால் கூற முடியாது உள்ளமைக்கு காரணம் விசாரித்து அறியப்பட வேண்டிய விடயம்.

ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும் போது எங்களால் எது சரி என்று கூற முடியாது. ஆனால் யாரோ ஒரு குழுவினர் சில சில வேண்டப்படாத நடவடிக்கையிலே ஈடுபட்டு வருகின்றார்கள். அவற்றை தடுக்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என்பது உண்மை.

என்னுடைய கேள்வி என்னவென்றால் வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை 2009 ஆம் ஆண்டு வரை இல்லாமல் இருந்தது. அதற்குப் பின்னர் மிகவும் கூடிய விதத்தில் அந்த விநியோகம் நடைபெற்றக் கொண்டிருக்கின்றது. அதைவிட பாராதூரமான குற்றச்செயல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வடமாகாணத்தில் 1 இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினர் குடிகொண்டிருக்கும் போது, எங்களுடைய பாதுகாப்புக்காக இங்கு இருக்கும் போது இவையெல்லாம் நடைபெறுவது எங்களுக்கு விசனத்தை ஏற்படுத்துகின்றது. வியப்பையும் ஏற்படுத்துகின்றது.

ஆகவே நீங்கள் ஆவாக்குழுவை யார் செய்கின்றார்கள் யாருடைய ஒத்தாசையுடன் செய்கின்றார்கள், யார் பின்னணியில் இருக்கின்றார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இவ்வாறான சூழலிலே எவ்வாறு இவையெல்லாம் நடைபெறுகின்றது என்பதே எமது கேள்வி என்றார்.

வட மாகாணத்தில் குறிப்பாக யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ள வாள்வெட்டு, கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய சமூக விரோதச் செயல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆவா குழு உட்பட ஆயுதக் குழுக்களின் பெயர்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.

இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி பொலிஸார் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, கடந்த 22 ஆம் திகதி சுன்னாகம் பிரதேசத்தில் வைத்து தேசியப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இருவர் ஆயுதக் கும்பலால் வாள்வெட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

இந்தத் தாக்குதலை தாமே மேற்கொண்டதாக ஆவா கும்பல் உரிமை கோரியதுடன், யாழ் குடாநாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறும் வலியுறுத்தி துண்டுப் பிரசுரமொன்றையும் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து பிரபாகரன் படை என்ற பெயரில் ஆவா குழு தனது துண்டுப்பிரசுரத்தில் தெரிவித்திருந்த அதே விடயங்களை குறிப்பிட்டு மற்றுமொரு துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து இந்த ஆவா குழு மற்றும் பிரபாகரன் படை ஆகியன தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தலைமையிலான கூட்டு எதிரணியினரும், பொதுபல சேனா, இராவணா பலய உட்பட சிங்கள பெத்த பிக்குகள் தலைமையிலான சிங்கள பேரினவாத அமைப்புக்களும்  கருத்துக்களை வெளியிட்டிருந்தன.

இதன்போது மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க முனைவதாகவும், முன்னாள் போராளிகளே இந்தக் கும்பல்களுக்குப் பின்னால் இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, தனக்கு விசுவாசமான முன்னாள் இராணுவ அதிகாரியொருவரைப் பயன்படுத்தி ஆவா குழுவை உருவாக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்திருந்த கோட்டாபய ராஜபக்ச, அமைச்சர் ராஜித்த பொறுப்பற்ற விதத்தில் அப்பட்டமான பொய்களை கூறி வருவதாக கூறியதுடன், அமைச்சரின் கருத்துக்களால், ஏற்கனவே பாரதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கா இராணுவம் மேலும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால் தான் தெரிவித்த கருத்துக்கள் பொய்யல்ல என்று மீண்டும் அடித்துக் கூறி அமைச்சர் ராஜித்த, விரைவில் அவை நரூபிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் ஆவா குழு தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றார்.

Comments

comments, Login your facebook to comment