முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் பௌத்த விகாரையொன்று அமைக்கப்படுவதாகவும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் 100 விகாரைகளை புனரமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.சட்டவிரோதமான முறையில் தமிழ் மக்களது பூர்வீக நிலங்கள் அபரிக்கப்பட்டு அதில் விகாரைகள் அமைக்கப்படுதல் உடன்தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எமது நாட்டைப் பொறுத்தவரை எங்கெங்கு சைவ மக்கள் வாழ்கின்றார்களோ அவர்கள் தமது வணக்கஸ்தலங்களான கோவில்களை அமைப்பதில் தவறில்லை. அதேபோன்று முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த மக்களும் அதிகளவில் வாழும் இடங்களில் தமது வணக்கஸ்தலங்களை அமைப்பதில் தவறில்லை.

அதிகளவான பௌத்த மக்கள் வாழும் இடங்களில் விகாரைகள் அமைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் மாங்குளம் போன்ற இடத்தில் ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத இடத்தில் பௌத்த விகாரை அமைத்து, அங்கு சில விடுதிகளை அமைத்து அங்கு வரும் சிங்கள மக்களுக்கான விடுதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பதென்பது ஒரு முற்றிலும் பலாத்காரமான விடயம். இதனை ஒரு சமய உள்ளீடாக தான் நான் பார்க்கின்றேன்.

அதேபோன்று கொக்கிளாய் பகுதியில் சிங்கள மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இவர்களில் 90 வீதமானோர் கிறிஸ்தவர்கள். எனவே அந்த மக்கள் தமக்கான தேவாலயத்தை அமைப்பதற்கு நாங்கள் எப்போதும் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை.

ஆனால் அங்குள்ள ஒரு சில குடும்பங்களுக்காக எமது மக்களதும் திணைக்களங்களதும் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரித்து ஒரு சில பிக்குகளின் ஏற்பாட்டில், அங்கு விகாரை அமைக்கப்படுகின்றது.

எனவே பௌத்த மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பௌத்த விகாரை அமைத்தால் எமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உதாரணமாக வவுனியாவின் தென்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு பௌத்த மக்கள் அதிகம் வாழ்கின்றனர். நாங்கள் அதனை எப்போதும் எதிர்த்ததில்லை. எனவே தமிழ் மக்களது பூர்வீக நிலங்களில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் விகாரைகள் அமைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.

Comments

comments, Login your facebook to comment