இராமேஸ்வரம் கடலில் 200 கிலோ தங்கக் கட்டிகளுடன் ஊடுருவ முயன்ற கடத்தல்காரர்கள் மீது, இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இராமேஸ்வரம், தனுஷ்கோடியில் இருந்து 30 முதல் 40 கிலோமீற்றர் தூரத்தில் இலங்கை நெடுந்தீவு, மன்னார் கடற்கரை உள்ளது.

இக்குறுகிய கடல் பரப்பை பயன்படுத்தி இராமேஸ்வரம், தனுஷ்கோடி, மண்டபத்தில் இருந்து கஞ்சா, பிரவுன்சுகர், கடல் அட்டை, இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வருகின்றனர்.

இதனை தடுக்க முடியாமல் இந்திய பாதுகாப்பு படை, சுங்கத்துறை, உளவுதுறையினர் திணறுகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, இலங்கையில் இருந்து ஒரு மர்மப் படகில் வந்த கடத்தல் கும்பல், இராமேஸ்வரம் ஓலைக்குடா, பிசாசுமுனை கடற்கரைக்குள் ஊடுருவ முயன்றனர்.

அங்கு ரோந்து சென்ற இந்திய பாதுகாப்பு படையினர், மர்மப் படகை நிறுத்துமாறு எச்சரித்தனர்.

இதில் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது இருமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

சுதாரித்த இந்திய வீரர்கள் பதிலுக்கு 11 முறை சரமாரியாக சுட்டனர். இதனால், கடத்தல்காரர்கள் படகுடன் மீண்டும் இலங்கை எல்லைக்குள் தப்பி சென்றனர்.

கடத்தல்காரர்கள் 200 கிலோ தங்கக் கட்டியுடன் ஊடுருவ முயன்றது தெரிய வந்தது.

இலங்கையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு கடத்தல் கும்பல் ஊடுருவிய பின் மீண்டும் இலங்கைக்கு தப்பிய சம்பவம் குறித்து இந்திய, இலங்கை பாதுகாப்பு படை அதிகாரிகள் ‘ஹொட் லைன்’ போனில் தகவல் பரிமாறி கொண்டதால், பல கோடி மதிப்புள்ள தங்க கட்டி கடத்தலை தடுக்க முடிந்தது.

இருப்பினும், கடத்தல்காரர்களுடன் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் இந்திய பாதுகாப்பு படை, மாநில மரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்

Comments

comments, Login your facebook to comment