625.500.560.350.160.300.053.800.900.160.90 (3)அச்ச நிலையுடன் கூடிய அடுத்து என்ன நடக்கும் என்பதும் தெரியாத நிலைப்பாட்டிலேயே இலங்கை தற்போது பயணித்து வருகின்றது, என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இனவாதமானது சமூக வலைத்தளங்களின் மூலம் அதி வேகமாக தூண்டப்பட்டு வருகின்றது. மேலும் அண்மைக்காலமாக சிங்கள அமைப்புகள் ஒன்றிணைந்து இரகசிய கூட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க சிங்கலே, நாம் சிங்கலே, பொதுபலசேனா, இராவண பலய போன்ற பல்வேறு அமைப்பும் ஒன்றிணைந்து நாளை கண்டி நகரில் 2 மணியளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவென நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சிங்கள இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அண்மைக்காலமாக பிக்குகள் மூலமாக நாட்டில் பல்வேறு விதமான பதற்ற சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

இந்த நிலையில் பாரிய அளவிலான இளைஞர்களை ஒன்று திரட்டும் நடவடிக்கை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாதது.

அண்மை காலமாக, நாட்டில் இரத்தக்களரி ஏற்படும், பல உயிர்களை கொடுத்தாவது எமது உரிமைக்காக போராடுவோம், என்ற வகையில் பயங்கர எச்சரிக்கைகளை விடுத்து வந்த தேரர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ஒரு புறம் இருக்க இனவாதக் கருத்தினை பரப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் என்பரின் வழக்கிற்கு அவருக்கு ஆதரவாக சுமார் 20 வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளார்கள்.

அவர் கைது செய்யப்பட்தில் அரசியல் பின்னணி உள்ளது. இதன் காரணமாக அவரை காப்பாற்ற அனைவரும் ஒன்று திரள வேண்டும். அவருக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் கூறி டான் பிரியசாத்க்கு ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே அவர் கைது செய்யப்படுவதற்கு முன் எனக்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என காணொளி வெளியிட்டுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.

ஒரு சில பிக்குகளின் செயல் காரணமாக நாட்டில் பௌத்தத்திற்கு அழிவு ஏற்படுத்தப்பட்டு விட்டது, இலங்கையில் பௌத்தம் இல்லாது போகும் அபாயம் நடந்து விட்டது என என்ற கருத்து மக்களிடையே பரவி வருகின்றது.

இவை சிங்கள மக்களிடம் புது வித வெறியை தூண்டுவதாக காணப்படுகின்றது என வெளிப்படையாக தெரிகின்ற போதும், அவை பற்றி அரசு இது வரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதா? என்பது கேள்விக்குறிதான்.

இந்த நிலையில் நாளை ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் எந்த வகையிலான முடிவைக் கொடுக்கும், அரசும் பொலிஸாரும் இதனை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றதா என்பதும் வெளிப்படுத்தப்பட வில்லை.

எது எவ்வாறாயினும், நாட்டில் மீண்டும் துளிர் விடும் இனவாதக் கருத்துக்களை தடுப்பதற்கு அரசு எத்தகைய செயற்றிட்டங்களை வைத்திருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை.

நாளைய தினம் நடக்கும் இப்பெரிய ஆர்ப்பாட்டம் இலங்கையின் பெரும்பான்மை மக்களிடையே எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்பதை நிதானமாக சிந்திக்க வேண்டிய தேவையிருக்கிறது.

மறுபுறத்தில் மீண்டும் 83 யூலைக் கலவரம் போன்ற ஒன்றை கொண்டுவந்து சிறுபான்மை மக்களை திட்டமிட்டு அழிப்பதற்கு சில சக்திகள் சதி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனவா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கின்றது.

இதுகுறித்து அரசாங்கம் விழிப்போடு செயற்படவில்லையாயின் இலங்கை மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலைக்கு போகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

Comments

comments, Login your facebook to comment