625.500.560.350.160.300.053.800.900.160.90தற்போது ஒன்று திரண்ட பிக்குகளின் முக்கிய நோக்கம் பௌத்தத்தை காப்பதா? அல்லது நாட்டை சுடுகாடாக மாற்றுவதா என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அரசியல் பின்னணிகள் இதில் காணப்படுகின்றது என்றே கூறப்படுகின்றது.

இன அழிப்பும், கலவரங்களும் இலங்கையில் ஏற்படுத்திய சுவடுகள் இன்றுவரை நினைவலைகளாக தொடருகின்றது. இந்த நிலையிலேயே இப்போது நாட்டை பிய்த்து உண்ண கடும் போக்கான இனவாத செயற்பாடுகள் வேகமாக பிசாசுகள் போன்று பரவிவருகின்றது என்பதே உண்மை.

அண்மையில் வடக்கு முதல்வரின் கோரிக்கை புலிகளின் தலைவர் விடுத்த கோரிக்கையினைப் போன்று சித்தரித்து பாரிய பிரளயமாக மாற்ற முயற்சி நடந்தது.

அந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த ஒரு சில பிக்குகளே தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகளுக்கும் காரணமாக இருக்கின்றார்கள்.

புனிதமான பௌத்தத்தை காக்க வேண்டும் என ஆரம்பத்தில் களமிறங்கியவர்கள், தற்போது முன்வைக்கும் முக்கிய வேண்டுகோள் முழு நாட்டிலும் அந்நிய மதங்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்பதே.

நேற்றைய தினம் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் இதனை மெய்ப்படுத்தின.

“வடக்கும் எமதே! கிழக்கும் எமதே உரிமை கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதே இவர்களது கோரிக்கை. அதே போன்று இவர்கள் பௌத்த கொடிகளையும் சிறுபான்மைகள், மற்றும் ஏனைய நிறங்கள் நீக்கிய மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் அமைந்த கொடிகளையே ஏந்தியிருந்தனர்.

குறித்த கொடிகளையே தேசிய கொடிகளாக மாற்ற வேண்டும் என அண்மைக்காலமாக சில பிக்குகளும், கடும் போக்காளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமைக்கு பெயர் பெற்ற நாடான இலங்கை தற்போது பயணிக்கும் பாதை அழிவுக்கான அடித்தளமாக கருதப்படுகின்றது. ஆனாலும் அரசு பொறுமை காப்பது ஏன் என்பது மட்டும் மர்மமாகவே தொடர்கின்றது.

இலங்கை அரசியல் யாப்பிற்கு அமைய பௌத்தம் பெற்றுள்ள முக்கியத்துவத்தினை உணர்ந்து அரசு பொறுமை காக்கின்றது எனவும் குறிப்பிடலாம்.

மேலும் இரங்கையில் புதிய அரசியல் யாப்பு அமைக்க நடைபெறும் முயற்சிகளை தடுக்கும் நோக்கமாகவும் இவை இருக்கலாம் என்பதிலும் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்கின்றது.

இதேவேளை முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தவரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் நாடு முழுவதும் இடம் பெற்று வருகின்றது. உதாரணமாக நேற்று தெஹிவளை பெஷன் பக் நிறுவன காட்சியறை தீக்கிரையாகியது.

குறித்த சம்பவம் இடம் பெற்ற போது சீசீடிவி காணொளிகளை அங்கிருந்து சிலர் அப்புறப்படுத்த முயற்சி செய்து பின்னர் பொலிஸாரின் மூலம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இது விபத்தாக இருந்தால் ஏன் ஆதாரங்களை அப்புறப்படுத்த முயற்சிகள் இடம் பெற வேண்டும். இதனால் குறித்த தீவிபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் பெஷன் பக் காட்சியறைகள் முஸ்லிம்களுடையது அவை முற்று முழுதாக அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து போராட்டங்கள் இடம் பெற்றதோடு அவை அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் ஏற்கனவே பல தடவை இடம் பெற்றன என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இது வரையில் தெரிவிக்கப்பட வில்லை. அவ்வாறான நிலை அடுத்தடுத்து தொடருமானால் எத்தனை பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது புரியாத ஒன்றா?

ஆக நாட்டில் இன வாதத்தினை பரப்புவதற்காக சதிகள் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இனியும் அரசு இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமானால் அடுத்து நாடு முழுவதும் உயிர்ப்பலிகள் ஏற்படும் வாய்ப்பு நிச்சயம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Comments

comments, Login your facebook to comment