shotகண்டி கல்ஹின்ன பகுதியில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வியாபாரம் அல்லது தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கண்டி கல்ஹின்ன பகுதியில் இன்று காலை கார் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானதுடன், ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கண்டி மஹியாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதான மொஹமட் அலி நுமாஹி என்ற இளைஞரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இளைஞரிடம் இருந்து, துப்பாக்கி சூடு நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரி 56 ரக துப்பாக்கி மற்றும் 20 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகநபர்கள் பயணித்த 301-2218 என்ற இலக்கம் கொண்ட சிவப்பு நிற கார், பூஜாபிட்டிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைதுசெய்யும் வகையில் பிரதேசம் முழுவதும் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலியான நபரும் காயமடைந்த நபரும் முஸ்லீம்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

முதலாம் இணைப்பு

கண்டி – அங்கும்புர பபிலியாகொல பள்ளிவாசலுக்கு அருகில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீதியோரமாக நின்று கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்களில் ஒருவர் போயப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ரி.56 ரக துப்பாக்கி மற்றும் கார் ஆகியன மீட்க்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

comments, Login your facebook to comment