625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)கிண்ணியாவில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளம் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

எனினும் குறித்த யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, டபிள்யூ.ஏ.எஸ்.ஆர்.விக்ரமராய்ச்சி நேற்று தெரிவித்தார்.

கிண்ணியா சூரங்கல் -சாந்திநகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதான நளீம் ஜனூபா என்ற கர்ப்பிணி பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 18 வயதான அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் கர்ப்பமடைந்துள்ளார்.

அதற்கு தனது காதலனே காரணம் என பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் முறைப்பாடும் செய்துள்ளார். எனினும், காதலன் அதனை மறுத்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, அவரால் தான் பெண் கர்ப்பமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனையடுத்து, காதலன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

எனினும், அந்தப் பெண்ணை தான் திருமணத் செய்து கொள்வதாகக்கூறி கடந்த மாதம் சூரங்கல் பள்ளி வாசலில் திருமணம் செய்து கொண்டார். எனினும், திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து அந்தப் பெண், தனது தாயின் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், கணவனின் வீட்டில் குளியலறையில் விழுந்து மரணமடைந்தாக ஆணின் உறவினர்கள் தெரிவித்தமை பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் அளித்த வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, கணவனை கைது செய்து தடுத்து வைத்துள்ள பொலிஸார், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளனர்.

Comments

comments, Login your facebook to comment