ALஇலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்படும் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதில் கூட அரசியல் தலையீடுகள் செல்வாக்குச் செலுத்துகின்றதா? என எல்லோரிடத்திலும் சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக பரீட்சைப் பெறுபேறுகள் எப்படி வருமோ என பரீட்சை எழுதிவிட்டு நீண்ட காலம்காத்திருப்பவர்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றார்கள்.

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயின்ற ஆசிரியர்களது பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட்டால் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

அல்லது அவர்களை நிரந்தர ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க வேண்டும், அவர்களுக்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்.

மேலும் வன்னி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஆசிரியர் பயிற்சிப் பெறுபேறுகளை ஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வெளியிடாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட வன்னி ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

தமது ஆசிரியர் பயிற்சிப் பெறுபேறுகள் அரசியல் தலையீடுகள் காரணமாகவே 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வெளியிடப்படாமல் தமிழர்கள் என்பதால் பழிவாங்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வன்னி யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் ஆசிரியர் சங்கங்கள் கூட தமது பெறுபேறுகள் வெளியிடப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருவது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தாமல் கண் மூடி இருந்து வருவதாகக் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் சங்கங்களுக்கு இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

comments, Login your facebook to comment