625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)கடந்த ஒக்டோம்பர் மாதம் 23ஆம் திகதி இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் போராளியின் மனைவி விவேதனி சபேஸ்வரன் இந்த தகவலை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என தெரிவித்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சபேஸ்வரன் மீது குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன், இன்றைய தினம் கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் ரி.ஐ.டியினர் முன்வைத்த கருத்துக்களை விசாரித்த நீதவான், எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என சபேஸ்வரனிடம் பயிற்சி பெற்ற ஒருவர் தங்களிடம் தெரிவித்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

எனினும், ரி.ஐ.டியினர் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரங்கள் இருக்கின்றதா என்று கடந்த 10ஆம் திகதி கொழும்பு நீதவான் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கோரியதனையடுத்து நீதவான் இன்று வரை விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் புதுக்கடை நீதவான் முன்னிலையில் தமக்கு கால அவகாசம் வழங்குமாறு இன்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கோரிக்கை விடுத்த நிலையில் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு, சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

comments, Login your facebook to comment