625.368.560.350.160.300.053.800.560.160.90கிளிநொச்சி பிரதேசத்தில் நேற்றைய தினம் பொதுச் சந்தை பற்றி எரிந்து பலகோடி ரூபாய் பொருட்கள் அழிந்து நாசமாகிப்போயிருக்கின்றன.

வியாபாரிகள் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் இன்று பல வியாபாரிகள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு கடையிலும் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இது தொடர்பாக வியாபாரிகள் கருத்து வெளியிட்டு இருக்கின்றார்கள் வேதனையுடன்,

தொடர்ந்து பத்து மணித்தியாளங்களுக்கும் மேலாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படாமல் எரிந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருதற்கு பல மணிநேரமாகியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கிளிநொச்சி வாசியொருவர்,

தீ ஏற்பட்ட சில மணிநேரத்திற்குள் தீயணைப்பு வண்டிகள் வந்திருக்குமாயின் ஒரு சில கடைகளின் அழிவுகளோடு தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடிந்திருக்கும்.

ஆனால் கிளிநொச்சியில் தீயணைப்பு வண்டிகள் இல்லாததால் இந்த பெரும் அழிவை சந்தித்திருக்கின்றோம் என்றார் சோகத்தோடு.

உண்மையில் இது துரதிஷ்டவசமான சம்பவம் தான். வடக்கில் போருக்குப் பின்னர், மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒருவாறாக கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அதிலும் கிளிநொச்சி போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நகரம்.

அங்கிருக்கும் வியாபாரிகள் தங்கள் வியாபாரத் தளத்தினை மெல்ல கட்டியெழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். போரின் வடுக்கள் ஒருபுறமிருக்க, அழிவில் இருந்து எப்படியேனும் மெல்ல மீள் எழுந்து கொள்ள வேண்டும் என்னும் அவர்களின் விடாமுயற்சியின் பலன் தான் இன்றைய கிளிநொச்சி நகரின் அபிவிருத்தி என்று சொன்னால் மிகையாகாது.

ஆனால், அவ்வாறான நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்பதை நினைக்கும் போது அபிவிருத்தியில் அரசாங்கம் கிளிநொச்சியை சரியாக கையாளவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

இன்றைய அரசாங்கமும் சரி, முன்னைய அரசாங்கமும் சரி வடக்கில் அபிவிருத்தி நடப்பதாக சர்வதேசத்திற்கு காட்டுவதற்கே முயற்சிக்கின்றனரே தவிர, அபிவிருத்தியை நீண்ட காலத்திற்கானதாக்க அவர்கள் முயற்சிக்கவில்லை என்பது தான் யதார்த்தம்.

இதனை இன்னும் தெளிவாக சொல்லுமிடத்து, வடக்கில் அமைக்கப்படும் அபிவிருத்திகள் பெரும்பாலும் கண்ணாடி அலங்காரப் பொருட்கள் போன்றவை தான். அவை சொகுசுகளை காட்டி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான உச்சபட்ச நாடகம்.

கிளிநொச்சி எவ்வாறு போருக்குள் சிக்கி சிதைந்தது என்பதை எல்லோருமே அறிவோம். அங்கிருக்கின்ற மக்களும், வர்த்தகர்களும் ஏற்கனவே போரில் எல்லாவற்றையும் இழந்தவர்கள். அவர்களின் வயிற்றில் ஏற்கனவே நெருப்பு எரிந்து கொண்டு தான் இருக்கின்றது.

இறுதிக்கட்டப்போர் முடியும் வரைக்கும் தங்களால் கையில் எடுத்துச் செல்லக்கூடியவற்றை எடுத்துச் சென்றவர்கள். எல்லாவற்றையும் மொத்தமாக பறிகொடுத்தவர்கள் தான்.

இருந்தும் பீனிக்ஸ் பறவை போல அவர்கள் மீண்டெழுந்து கொண்டு இருக்கின்றார்கள் மெல்ல. ஆனால், அரசாங்கத்தினதும், வடமாகாண சபையினதும் திட்டமிடப்படாத இந்த அபிவிருத்தியால் மக்களும், வியாபாரிகளும் இன்று நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றார்கள்.

நேற்றைய தினம், எரிந்த கடை உரிமையாளர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, வட்டிக்கு கடன் வாங்கி ஒரு கடையை போட்டு இருந்தேன், அது நேற்று கொஞ்ச நேரத்திற்குள் சாம்பலாகி போய்விட்டது என்று கூறும் போதே அவர் அடி வயிற்றில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதை அவரின் வார்த்தைகள் மூலமாக தெரிந்த கொள்ள முடிந்தது.

மற்றொரு வர்த்தகர் கூறும் பொழுது, நேற்று கிளிநொச்சியில் தீயணைப்பு வண்டிகள் இருந்திருந்தால். எங்கள் அழிந்த சொத்துக்களை காப்பாற்றியிருந்திருக்கலாம் என்றார் கண்ணீரோடு.

அழிவுகளைச் சந்தித்த ஒவ்வொரு வியாபாரிகளுக்குப் பின்னாலும் பல்வேறு சோகங்கள் தான் மிஞ்சி நிற்கின்றன.

அவர்கள் போரில் கண்ட இழப்புக்களோடு, மீண்டுவருவதற்காக பல லட்சம் ரூபாய்களை கடனாக வங்கிகளில் தான் பெற்று இருக்கின்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.

ஆனால் அவற்றை இப்பொழுது பறிகொடுத்திருக்கின்றார்கள். இவற்றை வடமாகாண சபையும், அரசாங்கமும் கவனத்தில் கொள்ள வேண்டியது கட்டாயமானது.

அதே நேரம் அபிவிருத்திகள் என்பவை குறுகிய காலநோக்கத்தினைக் கொண்டதல்ல. அவை நீண்ட கால இலக்குகளைக் கொண்டவை என்பதை மத்திய அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

வெளியில் கண்ணாடி போன்று வடிவமைத்து சொகுசு காட்டினால் அவை அழகாக காட்சி தருமே அன்றி, ஆபத்துக்களையும், அழிவுகளையும் சமாளித்து நிற்கக்கூடியவை அல்ல.

ஆக, அபிவிருத்திகளை நீண்ட கால இலக்காக்கி, ஆபத்துக்களை, விபத்துக்களில் இருந்து எவ்வாறு மக்களையும், மக்கள் உடமைகளையும் காப்பாற்றலாம் என்னும் உத்திகளையும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறான விபத்துக்களை முன்கூட்டியே தடுப்பது மற்றும், விபத்து ஏற்பட்டால் அவற்றினை உடனடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தீயணைப்பு வீரர்களையும், தீயணைப்பு பிரிவுகளையும் வட பகுதிகளில் ஏற்படுத்த வேண்டும்.

இது மக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் ஏற்படும் ஆபத்துக்களையும், இழப்புக்களையும் தவிர்ப்பதற்கான வழி.

அதிகாரிகள்க வனத்தை செலுத்த வேண்டும். மீண்டுமொரு விபத்து வரும் பொழுது மட்டும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதற்காக தயாராக இருக்காதீர்கள்.

விரைந்து செயலாற்றுங்கள். நேற்றைய தினம் எரிந்தது கடைத் தொகுதிகள் அல்ல. அவை மக்களின் வயிறு. சிறுகச் சிறுகச் சேமித்தவை.

ஒருவேளை விபத்து ஓய்ந்தது. நாட்கள் ஓடின என்று சும்மாயிருப்பீர்களாயின் அவர்களின் வயித்தெரிச்சல் அதிகாரிகளையும், பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகளையும் சும்மாய் விடாது. கவனம்.

14371763_10209091125626635_1693437587_n 14359860_10209091123626585_2135007325_o 14370397_1052877794759951_4426243065066202683_n 14330165_1052877678093296_7106023131265254073_n IMG_6063 IMG_6127

Comments

comments, Login your facebook to comment