11440017கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய காணியில் அத்துமீறி குடியிருந்து வருபவர்களால் பாடசாலையின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்த முடியாத நிலையில் அது திரும்பிச்செல்லும் நிலையில் இருப்பதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் அயற்பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்திற்கு அமைவாக கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டு, அங்கு சில அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது,பாடசாலை காணியின் ஒரு பகுதியில் நான்கு குடும்பங்கள் அத்துமீறி நீண்டகாலமாக குடியிருந்து வருகின்றமையினால் குறித்த பணிகளை முன்னெடுக்க முடியாது தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒதுக்கப்பட்ட நிதியும் திரும்பிச்செல்லும் ஆபத்தில் காணப்படுகிறது.எனவே, இது தொடர்பாக கரைச்சி பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது,

பிரதேச செயலகம் அத்துமீறி நீண்ட காலமாக பாடசாலை காணியில் குடியிருந்து வரும் நான்கு குடும்பத்திற்கும் கிளிநொச்சி நகருக்கு அண்மையாக கணகாம்பிக்கைகுளம் பிரதேசத்தில் மாற்று காணிகள் இருபது பேர்ச் வீதம் 06-10-2016 வழங்கியிருக்கின்றார்கள்.

அத்தோடு பாடசாலை காணியில் குடியிருப்பவர்களை உடனடியாக மாற்றுக் காணிக்கு செல்லுமாறும் கடிதம் மூலம் அறிவித்திருக்கின்றனர். ஆனால் மாற்றுக் காணிக்கு செல்வதற்கு ஒரு குடும்பம் இணங்கிய போதும் ஏனைய குடும்பங்கள் மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் குறித்த பாடசாலை காணியில் வெதுப்பகம் அமைத்து நடத்தி வருகின்ற ஒருவர் பிரதேச செயலகத்தின் கடிதத்தை பெற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்ததோடு மாற்றுக் காணிக்கு செல்ல மறுத்தும் வருகின்றார்

அத்தோடு மாற்றுக் காணிக்குச் செல்வதற்கு இணக்கம் தெரிவித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபரை அக்காணியில் குடியிருக்கும் அவர்களது உறவினர் ஒருவர் இன்று திங்கள் கிழமை தாக்குவதற்கு முயற்சித்ததோடு, கடுமையாக எச்சரித்தும் சென்றுள்ளார்.

எனவே நிலைமைகள் இவ்வாறு இருக்க பாடசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாது பாடசாலை சமூகம் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.

Comments

comments, Login your facebook to comment