2014-10-08 10.29.02கிளிநொச்சி பூநகரி சின்னப் பல்லவராயன்கட்டு தென்னம் தோட்டம் அமைந்துள்ள காணியினை வடமாகாண விவசாய அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கை புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொது அமைப்புகளினால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1,000 ஏக்கர் வரையான நிலப்பரப்பில் தென்னம் தோட்டம் உருவாக்கப்பட்டது. போர் முடிந்த பின்னர் இக்காணி முழுவதிலும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

சின்னப்பல்லவராயன்கட்டு கிராம மக்களுக்கென நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு 45 வரையான குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் இத்தென்னங் காணி வழங்கப்பட்டதுடன், இராணுவத்தினருக்கென 100 ஏக்கர் காணி பூநகரி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டது.

ஆனால் தென்னம்பிள்ளை காணியினைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த வேலிகள் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு தற்காலிக வேலியே தற்போது அமைக்கப்பட்டுள்ளதுடன் கோடை காலங்களில் இத்தென்னங்காணி தீயினால் முழுமையாக எரிந்த நிலையில் பலதடவைகள் பாதிப்புகளை எதிர்கொண்டது.

இந்நிலையில், இத்தென்னங் காணியினை வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பலதடவைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இறுதியாக நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் இவ்விடயம் ஆராயப்பட்ட போதிலும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் குறித்த காணியிலுள்ள தென்னைகளைப் பாதுகாப்பதற்கு வடமாகாண விவசாய அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது இக்காணியில் இராணுவத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணியாளர்கள் சிறிதளவான பராமரிப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள போதிலும் தென்னைகள் பாதுகாக்கப்படாததன் காரணமாக அழிவடையும் நிலையிலேயே காணப்படுகின்றது என அவர்கள் கூறினர்.

Comments

comments, Login your facebook to comment