171கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கோணாவில் பகுதியில் உள்ள மக்கள் தற்போதைய வரட்சி காரணமாக தமக்கான குடிநீர் பெற்றுக்கொள்ள முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் உள்ள கோணாவில் அறிவியல்நகர் உருத்திரபுரம் செருக்கன் ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் கரைச்சிப்பிரதேச சபையின் கீழ் உள்ள கோணாவில் கிழக்கு பகுதியில் 240 வரையான குடும்பங்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது நிலவும் வரட்சி காரணமாக இங்குள்ள மக்கள் தமக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு மிக நீண்டதூரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது என்றும் தெரிவித்;துள்ளதுடன் மீள்குடியேற்றத்தின் பின்னர் அமைக்கப்பட்ட பொதுக்கிணறுகள் தண்ணீரின்றிக் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதியில் நிலவும் குடிநீர் நெருக்கடி தொடர்பாகவும் தமக்கு குடிநீரை வழங்குமாறும் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை என்பவற்றுக்கு அறிவித்திருந்த போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் இதன் பின்னர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சமையிடம் தமது கோரிக்கையை முன் வைத்த போதும் எதிர்காலத்தில் நீர்த்தாங்கியொன்றை அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் எவரும் அக்கறை செலுத்தவில்லை என இப்பகுதி மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.

Comments

comments, Login your facebook to comment