625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)வெகுவிரைவில் கிளிநொச்சியில் புதியதொரு சந்தை உருவாக்கப்படும் என்பது எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சீவிவிக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை (08.11.2016) மாலை 4.00 மணிக்குமுதலமைச்சர் கிளிநொச்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கடைத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பலரும் ஒன்று சேர்ந்து மிகக் குறுகிய காலத்தினுள் இந்த 45 கடைகளையும் கட்டியமை எமக்கு மனமகிழ்வைத் தருகின்றது.

தீப்பிடித்த செப்ரெம்பர் 16ந் திகதி இரவிலிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் உங்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 20ஆயிரம் தரக்கூடியதாக இருந்தது.

அப்பொழுது நடந்த கூட்டத்தில் நான் ஒருவிடயத்தைக் கூறினேன். இங்கு வந்து வெறுமனே பேசுவதால் பயனில்லை நாங்கள் செயலில் காட்ட வேண்டும் என்றேன்.

நாங்கள் செயலில் காட்டுவதற்கு சகலரும் ஒத்துழைத்து இந்த 45 கடைகளையும் இன்று திறக்கக் கூடியதாக இருக்கின்றது.

எங்கள் அலுவலர்களும் ஒப்பந்தக்காரர்களும் ஊர் மக்களும் ஒன்று சேர்ந்து இவ்வாறான செயலில் ஈடுபட்டமை மற்றைய எல்லோருக்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

இன்றைய காலகட்டத்தில் வடமாகாணத்தில் தேவையானது யாவரதும் ஒத்துழைப்பே. வேறுபாடுகள், வித்தியாசங்கள் காட்டாது ஒரு நல்ல காரியத்திற்காக ஒன்றுபட சகலரும் முன்வரவேண்டும்.

இதைத்தான் கிளிநொச்சி மக்கள் மற்ற மக்கள் யாவருக்கும் எடுத்துரைத்துள்ளார்கள்.

சுனாமியின் போது இலங்கை இராணுவத்தினரும் புலிகளும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினார்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பின்னர் “பழைய குருடி கதவைத் திறவடி”என்ற கதைப்படி இருவரும் பிரிந்து விட்டார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஒற்றுமை ஒன்றே எம்மை வழிநடத்திச் செல்லும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னர் பத்திரிகையில் ஒருசெய்தி படித்தேன்.

ஆளுநர் அவர்கள் வடமாகாணம் பற்றிக் கூறியிருந்தார். வடமாகாண மக்கள் சாதியாலும் வர்க்கத்தாலும் கல்வி வேற்றுமைகளாலும் மதத்தாலும் வேற்றுமைப்பட்டுமுன்னேற முடியாமல் ஒருவருக்கொருவர் முரண்பட்டு இருப்பதாக அவர் கூறினார் என்றுசெய்தி இருந்தது.

இன்றைய உங்கள் ஒற்றுமைச் செயற்பாடு அவரது அவதானத்தைப் பொய்மைப் படுத்துத்துவதாக அமைந்துள்ளது. எம்மக்கள் சாதி, சமய, வர்க்க மத வேறுபாடுகளைக் கடந்து ஒருமித்து உழைத்து மிகக் குறுகிய காலத்தினுள் வெற்றியடையக் கூடியவர்கள் என்பதை கிளிநொச்சி மக்களாகிய நீங்கள் இன்று அவருக்குப் பதிலளித்துள்ளீர்கள்.

உங்கள் ஒற்றுமை எம் எல்லோருக்கும் முன்மாதிரியாக அமைய வேண்டும். இச் செயற்பாட்டிலே உங்கள் பிரதேசசபைச் செயலாளர் கம்சநாதனுடன் பிரதம செயலாளர், எமது அமைச்சின் செயலாளர் மேலும் பலஅலுவலர்கள் சேர்ந்து உரிய பணத்தைச் சேகரித்து குறுகிய காலத்தினுள் இக்கடைகளைக் கட்டஉதவியுள்ளார்கள்.

எமது செயலாளர் திருமதி.கேதீஸ்வரன் அவர்கள் பிரதம செயலாளரிடம் இருந்து பணத்தைக் கறந்து இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தார்.

விரைவில் இம்மாத முடிவுக்கு முன்னர் நட்டஈடாக 74 மில்லியன் உங்களுக்குக் கிடைக்கப் போகின்றது. மேலும் புதிய சந்தைக் கட்டடத்திற்கு 150 மில்லியன் கிடைக்கப் போகின்றது.

மேலும் தீயணைப்புப் படையணி உருவாக்க 100 மில்லியனும் எல்லாமாக 324 மில்லியன் அமைச்சரவையால் அனுமதிக்கப் பட்டுள்ளது.

நட்டஈடு இம்மாதத்திலும் சந்தைக் கட்டடம், தீயணைப்புப் படையணியும் அடுத்த வருடம் தொடக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனை எனது 50 வருடகால நண்பர் கௌரவ சுவாமிநாதன் அவர்கள் தொலைபேசியில் எனக்குக் கூறினார். எமது மனமார்ந்த நன்றிகள் அவருக்குஉரித்தாகுக.

வெகுவிரைவில் கிளிநொச்சியில் புதியதொரு சந்தை உருவாக்கப்படும் என்பது எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அத்தோடு யாவரும் சேர்ந்து ஒரு செயற்பாட்டில் எம்மால் இறங்க முடியும் என்பது எமக்கு எம்மீது நம்பிக்கை ஏற்படுத்துகின்றது.

Comments

comments, Login your facebook to comment