கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச்சந்தியில் இருந்து திருவையாறு ஊடாக இரணைமடு குளம் வரை நடைபெறுகின்ற வீதி புனரமைப்புப் பணிகளில் கிளிநொச்சியின் இயற்கை வளமான மரங்கள் அழிக்கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்

குறித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் எமது செய்திச் சேவை வினவியபோது,

கடந்த இரண்டு மாதகாலமாக நடைபெற்று வருகின்ற இவ்வீதி அபிவிருத்திப் பணியில் வீதியின் அருகில் இருக்கின்ற பனைமரங்கள் ஒருநாளைக்கு சுமார் ஐந்து, ஆறு மரங்கள் ஜெசிபியினால் பிடுங்கப்பட்டு இரணைமடு வாய்க்காலிற்கும் புனரமைக்கப்படுகிற பாதைக்கும் நடுவே குழி தோண்டப்பட்டு புதைக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அத்துடன் கிளிநொச்சியில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்பட்டு ஒரு பக்கம் இயற்கை அழிந்து வருகின்ற நிலையில் இவ்வாறு அபிவிருத்தி என்ற பெயரிலும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.

இம்மர அழிப்பும் கிளிநொச்சியில் இன்னமும் மாரிமழை பெய்யாமைக்கு காரணமாக இருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், குறித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடயத்திற்கு சிறந்த தீர்வினை தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Comments

comments, Login your facebook to comment