கிளிநொச்சி அக்கராயனில் இருந்து முக்கொம்பன் வழியாக நாள்தோறும் நடைபெறுகின்ற  இலங்கைப் ​போக்குவரத்துச் சபைக்கு  சொந்தமான பஸ் சேவை, குண்டும் குழியுமான வீதி காரணமாக நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது.

அக்கராயனுக்கும் முக்கொம்பன் கிராமத்துக்கும் இடையிலான  நான்கு கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக, பெருங்குழிகள் ஏற்பட்டு   பஸ் சேவையும் இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மழை தொடங்கியுள்ள நிலையில், சேறும் சகதியுமான வீதியில் பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சியில் இருந்து நண்பகல் 12.45 மணிக்கு அக்கராயனுக்கு செல்லும் இ.போ.ச பஸ், பிற்பகல் 2 மணிக்கு அக்கராயனில் இருந்து புறப்பட்டு ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்தைச்  சென்றடைந்து, மறுநாள் காலையில் அதே வழித்தடத்தின் ஊடாக கிளிநொச்சிக்கு திரும்புகின்றது.

ஆசிரியர்கள், மாணவர்கள்  இந்த பஸ்ஸை நம்பிக் காத்திருப்பதுடன் முக்கொம்பன் கிராம மக்கள் அக்கராயன், பூநகரி பிரதேச மருத்துவமனைகளுக்கும், பூநகரிப் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் என்பவற்றிற்குச் சென்றுவருவதற்கும் நம்பியுள்ளனர்.

வீதிச் சேதம் காரணமாக பஸ் சேவை தடைப்படுவதால், வீதியைப் புனரமைத்துத் தருமாறு புனரமைத்துத் தருமாறு கடந்த காலங்களில், வடமாகாண போக்குவரத்து அமைச்சர், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பூநகரிப் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

comments, Login your facebook to comment