downloadகிளிநொச்சி இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியான இபாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி பணிகளில் மோசடிகளுடன் கூடிய முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள கமக்கார அமைப்புக்களை உள்ளடக்கிய பிரதேசங்களில் பெருமளவு நிதி ஒதுக்கிட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களிலேயே இந்த முறைகேடுகள் இடம்பெறுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய விவசாய குளமான இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இதன் ஒரு பகுதியாகவே அதனை அண்மித்துள்ள பிரதேசங்கள் இபாட் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாகவே கிளிநொச்சி – திருவையாறு, மகிழங்காடு கமக்கார அமைப்புக்கு உட்பட்ட பிரதேசத்திலும் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் கீழ் வாய்க்கால்கள், பொதுக்கிணறுகள் என்பன அமைக்கப்பட்டுள்ள போதும் அவை உரிய தராதரத்துடன் அமைக்கப்படவில்லை என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளதுடன்,

இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தி திட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், தற்போது ஆரம்பித்துள்ள பருவமழையின் காரணமாக குறித்த வீதியால் பயணிக்க முடியாதுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே அபிவிருத்தி திட்டங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இந்த பெருமளவான நிதியை உரிய வகையில் முழுமையாக பயன்படுத்தி தராதரமான அபிவிருத்தி திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுமாத்திரமன்றி குறித்த பகுதியில் இபாட் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கிணறு இடிந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரு பக்கங்களிலிருந்தும் மேலிருந்து அடிப்பகுதி வரை வெடிப்பு ஏற்பட்டுள்ளதனால், எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட பிரதி நீா்ப்பாசன பணிப்பாளா் என்.சுதாகரனை செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கொண்டு வினவியபோது,

இபாட் திட்டத்தின் கீழ் இவ்வாறான பல குறைபாடுகள் காணப்படுவதாகவும், பருவமழை ஆரம்பித்த பின்னரே இந்த குறைபாடுகளை வெளிப்படையாக அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தடன் ஒப்பந்தகாரர்களிடமிருந்து குறித்த அபிவிருத்தி பணிகளை நீர்ப்பாசன திணைக்களம் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் தாம் பொறுப்பேற்கின்றபோது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அவை நிவா்த்தி செய்யப்பட்ட பின்னரே பொறுப்பேற்கப்படும் எனவும் குறிப்பிட்டதுடன், அதுவரை அவா்களுக்கான நிதி விடுவிப்பும் மேற்கொள்ளப்படாது என்றும் தெரிவித்தார்.downloadkele01-1 kele02-1 kele-6

Comments

comments, Login your facebook to comment