பளையில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞரொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பளை – வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளை பின்னால் வந்த குடும்பஸ்தர் ஒருவர் குறித்த இளைஞரை வழிமறித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலமாக கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மீது தாக்குதல் நடத்திய நபர் தற்காலிகமாக பளை வண்ணாங்கேணி பிரதேசத்தில் வசித்து வருவதாகவும் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுகொண்டிருப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.