கிளிநொச்சி பூநகரியில் கத்தியைக் காட்டி ரூ. 13 லட்சம் கொள்ளை

கிளிநொச்சி பூநகரியில் கத்தியைக் காட்டி ரூ. 13 லட்சம் கொள்ளை

புல்மோட்டைப்பகுதியிலிருந்து கிளிநொச்சி, பூநகரி பரமனை பகுதிக்கு வாகனக்கொள்வனவுக்காக சென்ற நால்வரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 13 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

புல்மோட்டைப்பகுதியிலிருந்து பூநகரி பரமனை பகுதிக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக நேற்றுமுன்தினம் நால்வர் சென்றிருந்தனர்.

அங்கு வாகனத்தை காட்டுவதாகக் கூறியவர்கள் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி வாகனக் கொள்வனவுக்கு எடுத்துவந்த 13 லட்சம் ரூபா பணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் தொடர்பில் உடனடியாக பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

முறைப்பாட்டுக்கமைய பூநகரி பொலிஸார் பூநகரி சங்குப்பிட்டி பகுதியில் வைத்து 6 சந்தேகநபர்களை கைதுசெய்தனர். அத்துடன் அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட 13 லட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டனர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணையின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.