கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார கட்டமைப்புக்கான110 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச் சென்றது

கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார கட்டமைப்புக்கான110 மில்லியன் ரூபாய் நிதி திரும்பிச் சென்றது

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் (PSSP) நிதியொதுக்கீட்டின் கீழ், 2023ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 210 மில்லியன் ரூபாய் நிதியில் 110 மில்லியன் ரூபாய் வேறுமாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார கட்டமைப்புகளின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 210 மில்லியன் ரூபாய் நிதியில், திடீரென 110 மில்லியன் ரூபா​யை மாகாண சுகாதார அமைச்சால், வேறு மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அதுதொடர்பில், கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி கடிதம் ஒன்றும், மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின், மாவட்ட மருந்து களஞ்சியத்துக்கான கட்டுமான பணிகள் நிறைவுறுத்தப்படாத நிலையில் காணப்படுவதுடன் முழங்காவில் வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கான விடுதி அமைக்கப்படாமலும் காணப்படுகின்றன. இவற்றைவிட, வன்னேரிக்குளம் மற்றும் கண்டாவளை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையங்களின் கட்டடங்கள் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன.

இவ்வாறு கிராமிய வைத்தியசாலைகளின் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளபோதும், குறித்த நிதிமீள திருப்பிப் பெறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.