கிளிநொச்சி வன்னேரிக்குளம் மக்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்படும் அரசாங்கம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் மக்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏமாற்றப்படும் அரசாங்கம்

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் தொடக்கம் பாலாவி வரையான வீதியைத் தொடர்ந்து புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என புநகரி பிரதேச சபையின் தவிசாளர் சி.சிறிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது: வன்னேரிக்குளத்தில் இருந்து பாலாவி வரையான வீதி புனரமைப்புகள் தொடங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இவ்வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

இடைநிறுத்தப்பட்ட வீதி வேலையை முன்னெடுக்குமாறு, பல்லவராயன்கட்டு சந்தியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், 2022 ஏப்ரல் மாதத்தில், வீதி வேலைகள் தொடங்கப்படும் என அதிகாரிகளால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

வன்னேரிக்குளத்தில் இருந்து பாலாவி வரையான 27 கிலோ மீற்றர் தூரம்கொண்ட வீதி புனரமைக்கப்பட வேண்டியுள்ளது. 2,000 குடும்பங்கள் வாழ்கின்ற ஜெயபுரம், வன்னேரிக்குளம், பல்லவராயன்கட்டு, வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய கிராமங்களில் ஜெயபுரம் மகா வித்தியாலயம், வேரவில் மகா வித்தியாலயம், கிராஞ்சி, வலைப்பாடு பாடசாலைகள் என நான்கு பாடசாலைகள் இயங்குகின்றன.

வேரவில் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் வண்டி, வீதி புனரமைக்கப்படாத காரணத்தால், முழங்காவில் ஆதார வைத்தியசாலை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை என்பவற்றுக்கு அவசரமாகச் செல்ல முடியாது உள்ளது.
இந்நிலையில், கிளிநொச்சி மேற்குக்கான போக்குவரத்து, வன்னேரிக்குளத்தில் இருந்து பாலாவி வரை சீர்குலைந்து உள்ளது. குன்றும்குழியுமான வீதியால், பூநகரி கடலுணவுகளை கிளிநொச்சி சந்தைக்கு கொண்டு செல்வதிலும் நெருக்கடிகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், குறித்த வீதியைப் புனரமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்டச் செயலகம், பூநகரி பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கியமான வீதி ஒன்று புனரமைக்கப்படாமல், பல கிராமங்களின் மக்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக ஏமாற்றப்படுகின்றார்கள் எனவும் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.