கொழும்பில் பணத்திற்காக 10 வயது சிறுவனை கடத்திய பெண்ணால் பரபரப்பு

கொழும்பில் பணத்திற்காக 10 வயது சிறுவனை கடத்திய பெண்ணால் பரபரப்பு

நீர்கொழும்பில் கடத்தப்பட்ட 10 வயது சிறுவன் கொழும்பு கிராண்ட்பாஸில் மீட்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கொடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த சிறுவன் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ஹெரோயின் விற்பனையில் ஈடுபடும் பெண் ஒருவர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து ஹெரோயினை பெற்றுக்கொண்ட நபர் அதற்கான பணத்தை முழுமையாக செலுத்தாமையால், சிறுவன் கடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தகர் ஒருவரின் 10 வயதான பேரனை கடத்திச் சென்று, கிராண்ட்பாஸ் ரந்திய உயன பகுதியிலுள்ள வீடமைப்பு தொகுதியில் தடுத்து வைத்துள்ளார்.

அத்துடன், வர்த்தகரை தொடர்புக் கொண்டு அவரது மகன் பெற்றுக் கொண்ட போதைப்பொருளுக்கான பணத்தை செலுத்துமாறு குறித்த பெண் கோரியுள்ளார்.

இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் குறித்த சிறுவன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக மீட்டமை குறிப்பிடத்தக்கது.