15 வயதுடைய சிறுமியை கண்டு பிடித்த தாருங்கள் – கண்ணீர் மல்கும் பெற்றோர்
15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் குறித்த சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கெங்கல்ல, அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சிறுமி (13.10.2022) அன்று காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தினத்தில் பாடசாலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி இந்த சிறுமி தனது பாடசாலையின் தோழி ஒருவருடன் பாடசாலைக்கு செல்லாமல் கண்டியிலிருந்து கொழும்புக்கு தொடருந்தில் வந்துள்ளதாக காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு தொடருந்தில் வந்த இளைஞர் ஒருவர் இந்த சிறுமிகள் மீது சந்தேகம் அடைந்து சிறுமிகளிடம் தகவல் கேட்டுள்ளார்.
பின்னர், இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்ததையடுத்து, அவர்கள் வரும் வரை சிறுமிகளை தனது காவலில் வைக்குமாறு பெற்றோர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள் வரும் வரை அவர்கள் காலி முகத்திடலில் காத்திருந்துள்ளனர். இதன்போது ஒரு சிறுமி காணாமல் போயுள்ளார்.
இதேவேளை காணாமல் போன சிறுமியுடன் இருந்த மற்றைய சிறுமியை குறித்த இளைஞன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் நிலையம் – 081 237 4073
தெல்தெனிய தலைமையக பொலிஸ் பரிசோதகர் – 071 859 1066