கிளிநொச்சி மாவட்டத்தில் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதால், பல விவசாயிகள் பொருளாதார ரீதியாக தாக்கம் அடைந்துள்ளார்கள் என கிளிநொச்சி இரணைமடு குள கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இக்களை நெல்லை கட்டுப்படுத்த இயலாத நிலையில், நெற்செய்கையைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை பயிர் நிலையில் இனங்காண முடியாததால், கையால் பிடுங்கியும் கட்டுப்படுத்த இயலாது. பன்றி நெல் கதிர் வந்த பின்னர், கைகளால் பிடுங்கி கட்டுப்படுத்துவது மிகக் கடினமான காரியமாகும்.

தற்போதைய மனித வலுக் குறைவு, அதிகரித்த கூலி காரணமாக இக்களை நெல்லைக் கட்டுப்படுத்துவது இயலாதுள்ளது. இதனை கட்டுப்படுத்த இரசாயன நாசினிகள் எவையும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இதைக் கட்டுப்படுத்த இரண்டு, மூன்று போகங்களுக்கு உற்பத்தி செயற்பாட்டில் ஈடுபடாமல், வயலை தொடர்ந்து உழவேண்டும். இது விவசாயியை பொருளாதார பெரும் பாதிப்படைய செய்து விடும்.

எனவே, துறைசார் விவசாய ஆராய்ச்சியாளர்கள் கூடுதல் அக்கறை கொண்டு, இப்பன்றி நெல்லைக் கட்டுப்படுத்த ஆவன செய்ய வேண்டும் என விவசாய சமூகம் எதிர்பார்க்கின்றது. பன்றி நெல்லும் பாதீனமும் எமது மாவட்டத்தின் விவசாய செயற்பாட்டை முற்றாக அழித்து விடும் அபாயமுள்ளது எனவும் தெரிவித்தார்.