தேர்தல் காலத்தில் வெளிநாடு மற்றும் கொழும்பில் இருந்து மூட்டை முடிச்சுக்களுடன் வருபவர்களை புறக்கணிக்க வேண்டும்

தேர்தல் காலத்தில் வெளிநாடு மற்றும் கொழும்பில் இருந்து ஆசை வார்த்தைகளுடன் வருபவர்களை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் வன்னி மாவட்ட இணைப்பாளர் மகாதேவா புஸ்வதேவா தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் இன்று (12.01) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்து பிரச்சனைகள் ஏராளம். ஒவ்வொரு கட்சிகளும் மாவட்டத்தில் அடிபட்டு வேட்பாளர்களை போடுகிறார்கள். இதற்கிடையில் கொழும்பில் இருந்து அதாவது இங்கிருந்து கொழும்பு சென்றவர்கள், வெளிநாடு சென்றவர்கள் எல்லோரும் தேர்தல் வந்தால் மூட்டை முடிச்சுகளுடன் இங்கு வந்து ஒவ்வொருவராக ஆட்களை தேடிப்பிடித்து எங்களிடம் காசு இருக்கு வெல்ல வைக்க முடியும். தேசிய கட்சியில் உங்களை அறிமுகப்படுகிறோம் எனக் கூறுகிறார்கள். அப்படியெனில் தேசிய கட்சியில் கேட்க வைக்கலாம் தானே. ஏன் இடையில் புறோக்கர். இவர்கள் ஒரு கட்சியை காட்டி அங்கு சென்று அறிமுகப்படுகிறார்கள். இவர்கள் அரசியல் வியாபாரிகள். அவர்கள் இங்கு வாக்குகளைப் பெற்று தம்மிடம் இவ்வளவு வாக்கு இருக்கு, இவ்வளவு பேர் இருக்கினம் என்று காட்டுகிறார்கள். தேசிய கட்சிக்கு தான் எனில் தேசிய கட்சியிலேயே இறக்கட்டும். ஒவ்வொருவராக பேரம் பேசி வேட்பாளரை எடுக்கிறார்கள். கொழும்பு, வெளிநாடு என்பவற்றில் இருந்து ஆசை வார்த்தைகளுடன் இங்கு வருகிறார்கள். இதற்குள் எமது மக்கள் அகப்படுவதால் வாக்கு சிதறுகிறது.

தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளார்கள் புதிய கட்சிகளில் சேரும் போது யோசிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட வாக்கு எடுத்ததும் சென்று விட்டார்கள். அதன் பின் போட்டியிட்டவர்கள் அந்த கிராமத்தில் தான் வாழனும். அங்கு அவர்களுக்குள் முரண்பாடு. இந்தப் பிரச்சனை வவுனியா மட்டுமல்ல. வடக்கு – கிழக்கில் இதான் நிலை. இதனை மக்கள் விளக்கிக் கொண்டு புதிதாக வருபவர்களை புறக்கணிக்க வேண்டும்.

இங்கு உள்ள கட்சியினர் வேட்பாளரை நியமிக்கும் போது சரியான முறையில் வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும். பதவி ஆசை பிடித்தவர்கள், வழக்கு உள்ளவர்களை நியமிக்க முடியாது. சமூகத்தில் பிரச்சனை என்றால் தட்டிக் கேட்க கூடியவரை போட வேண்டும். தட்டிக் கேட்டால் பகை வரும், முகம் முறியும் என நினைப்பவர்களை வேட்பாளராக ஏன் நிறுத்த வேண்டும்.

வடமாகாணத்தில் மூட்டை டுடிச்சுகளுடன வந்து வேட்பாளரை தேடி போடுபவர்களை மக்கள் புறககணிக்க வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும் வடமாகாணத்தில் இருப்பவர்கள், மக்களுக்காக இவ்வளவு காலமும் கஸ்ரப்பட்டவர்களை தான் முன்னுக்கு கொண்டு வர வேண்டும். மூட்டை முடிச்சுக்காரரை புறக்கணிக்க வேண்டும். புதிதாக வாற கட்சிக்கு தலைவர் யார் என்று தெரியாது. கொள்கை தெரியாது. அதன் பின் எப்படி போட்டியிட முடியும். தேசியக் கட்சியின் பிரதிநிதி என்றால் அதில் ஆசனம் தருமாறு கேளுங்கள்.

வவுனியாவில் இருந்தம், இப்ப கொழும்பில் வசிக்கிறோம். வெளிநாட்டில் வசிக்கிறோம் எனக் கூறிக் கொண்டு தேர்தல் அறிவித்ததும் வருபவர்களை நிராகரிக்க வேண்டும். இவர்களது பின்னனி என்ன..? யாருக்காக வந்துள்ளார்கள் என ஆராய வேண்டும். இது தொடர்பில் மக்கள் முடிவு எடுக்க வேண்டும்.

அத்துடன் எமது கட்சி வன்னியில் போட்டியிடும். அதன் கூட்டனி பேச்சுக்கள் நடைபெறுகின்றன. விரைவில் அதனை நாம் மக்களுக்கு தெரிவிப்போம் எனத் தெரிவித்தார்