கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனை இல்லை

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனை இல்லை

கிளிநொச்சி, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனை இடை நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக, நோயாளர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

முன்னர், அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்களிடம் குருதி சேகரிக்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோயாளர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆனால், தற்போது நோயாளர்களை நேரடியாகவே கிளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்லுமாறு அறிவிக்கப்படுவதன் காரணமாக, அக்கராயன் பிரதேச வைத்தியசாலையை நம்பியிருக்கும் வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான்குளம், கந்தபுரம், முக்கொம்பன், கண்ணகைபுரம், கோணாவில், யூனியங்குளம், அமதிபுரம், ஆரோக்கியபுரம், அம்பலப்பெருமாள்குளம், கோட்டைக்கட்டியகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5,000 வரையான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் குருதி பரிசோதனையை நோயாளர்கள் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்களால் கோரப்பட்டுள்ளது.